மெட்ரோ ரயிலில் விஜய் - மோடி ஒன்றாக பயணம் - சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தின் முதல் செயல்பாட்டு பகுதியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி சென்னை வருகிறார். அப்போது பிரதமர் மோடியும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரெயிலில் இணைந்து பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் வழித்தடம் முதல் செயல்பாட்டு பகுதியாக திறக்கப்பட உள்ளது.

அக்டோபர் 11-ம் தேதி காலை 10.55 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைய உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி செல்லும் அவர், காலை 11.30 மணியளவில் பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதைத்தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தில் முதல்-அமைச்சர் விஜய்யும் அவருடன் பங்கேற்கிறார்.முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் இணைந்து பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சியாக இது அமைகிறது. இதனால் இந்த நிகழ்வு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
மெட்ரோ நிகழ்ச்சியை தொடர்ந்து பிரதமர் மோடி போரூரில் இருந்து காரில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு செல்ல உள்ளார். அங்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதுடன், இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், போரூரில் இருந்து சென்னை ஐ.ஐ.டி. செல்லும் வழித்தடத்திலும் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை சின்னமலை முதல் கிண்டி வழியாக ஐ.ஐ.டி. வரை சுமார் 1.5 கிலோமீட்டர் பகுதியில் வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
