90 லட்சம் இந்தியர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை - போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பிரதமர் பேச்சுவார்த்தை!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அங்குள்ள சுமார் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுடன் போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில். டெஹ்ரான் (ஈரான்), டெல் அவிவ் (இஸ்ரேல்), அபுதாபி மற்றும் துபாய் போன்ற இடங்களில் இந்தியத் தூதரகங்கள் மூலம் 24 மணி நேர உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வான் எல்லைகள் மூடப்பட்டதால், வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்கவும், தேவைப்பட்டால் அவர்களை மீட்கவும் விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. போர்ப் பகுதிகளில் பயின்று வரும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களைத் தொடர்புகொண்டு அமைதி திரும்ப வலியுறுத்தி வருகிறார்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய மோடி, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டுகோள் விடுத்தார். இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்த மோடி, அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பதில் அந்நாடு காட்டும் அக்கறைக்கு நன்றி தெரிவித்தார். பஹ்ரைனில் வசிக்கும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மன்னர் ஹமாத் பின் இஷாவிடம் கோரிக்கை விடுத்தார்.
மத்திய கிழக்கின் 11 நாடுகளில் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 350 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இது வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா திரும்பக் காத்திருப்பவர்களுக்குப் பெரும் தடையாக அமைந்துள்ளது.
