“தமிழகத்தில் போக்சோ வழக்குகள் 125% உயர்வு!” - கரு.நாகராஜன் மீதான புகார் குறித்து விசாரணை - குஷ்பு!
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு சுந்தர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மாநில அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் கடந்த சில காலங்களில் போக்சோ வழக்குகள் 125% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட குஷ்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

"ஒரு பெண்ணாக இருந்தும், தனது அண்ணன் ஆட்சியிலேயே பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்துக் கேள்வி கேட்கக் கனிமொழி எம்.பி தயங்குவது ஏன்?" என்று அவர் வினவினார்.திமுக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு வரும்போது அவர்களைத் தற்காலிகமாக நீக்கிவிட்டு, பின்னர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதை அவர் விமர்சித்தார்.
பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் மீது பெண் நிர்வாகி ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, "அந்தப் புகார் குறித்துக் கட்சி ரீதியாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடத்தில் இருப்பது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், மதுரையில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் மோசமாக உள்ளதாகவும், மாநகராட்சிப் பணிகளில் ரூ.200 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பரப்புரை கூட்டங்களில் கூடும் கூட்டங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
