பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு 2 நாள் போலீஸ் காவல் - போக்சோ நீதிமன்றம் உத்தரவு!
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஜெம் வீரமணியை விசாரணைக்காக இரண்டு நாள்கள் காவல் வழங்கிச் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியை தீவிர விசாரணைக்கு உட்படுத்தும் வகையில், காவல்துறை தரப்பில் அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பத்மா, கோரப்பட்ட 5 நாட்களுக்குப் பதிலாக 2 நாள்கள் மட்டும் காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், விசாரணைக் காவல் நிறைவடைந்ததும் வரும் சனிக்கிழமையன்று ஜெம் வீரமணியை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்த காவல் நீட்டிப்பு வழக்கில் கூடுதல் உண்மைகளைக் கண்டறிய உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
