ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்த விபரீதம்... தாய், மகள் பரிதாபப் பலி, 2 பேர் கவலைக்கிடம்!

 
விஷம்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள அய்யர்குன்னம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத் 50 என்பவரது குடும்பத்தினர், கடுமையான நிதி நெருக்கடி காரணமாகப் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு இவர்களது உறவினர் ஒருவர் கைபேசியில் அழைத்தும் யாரும் பேசாததால் சந்தேகமடைந்து, பக்கத்து வீட்டுக்காரருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 4 பேரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர்.

விஷம்

அங்கு உயிருக்கு விபரீதமான நிலையில் போராடிக் கொண்டிருந்த ஜோபி செருபரத், அவரது மனைவி ஜோத்ஸ்னா 40, மகள் மரியா தெரசா தாமஸ் 16 மற்றும் மகன் ஆலன் 9 ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி ஜோத்ஸ்னா மற்றும் அவரது மகள் மரியா தெரசா தாமஸ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஜோபி செருபரத் மற்றும் சிறுவன் ஆலன் ஆகிய இருவருக்கும் தற்பொழுது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி ஆம்புலன்ஸ்

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கோட்டயம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வியாபாரி ஜோபி செருபரத் சீட்டுப் பணமாக சுமார் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்திருந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த முதலீட்டுத் தொகை உரிய நேரத்தில் திரும்பக் கிடைக்காததால் அவர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்ததும், அதன் காரணமாகவே இத்தகைய விபரீத தற்கொலை முடிவை எடுத்ததும் உறுதியாகியுள்ளது.