பகீர்... 2 ஆண்டுகளுக்கு முன் கணவனை விஷம் கொடுத்து கொன்று புதைத்த மனைவி... எலும்புக்கூடாக சடலம் மீட்பு!

 
குஜராத்

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜிக்னேஷ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்தார். குடும்பத்தினர் அவரிடம் பேச முயன்ற போதெல்லாம், அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரித்வி கூறி வந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் போனில் பேச அனுமதிப்பதில்லை என்றும் கூறித் தொடர்ந்து குடும்பத்தினரை நம்ப வைத்து வந்துள்ளார். மேலும் அங்கு நிரந்தரக் குடியுரிமை பெற்ற பின்னரே அவர் இந்தியா திரும்புவார் என்றும் பொய்யான தகவலைக் கூறி நாடகமாடியுள்ளார்.

இந்நிலையில் ஜிக்னேஷின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டு, அவரிடம் பேசுவதற்குத் தொடர்பு எண்ணைக் கேட்டுள்ளார். அப்போது மனைவி பிரித்வி அளித்த பதில்கள் உறவினருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக உறவினர் எச்சரித்ததை அடுத்து, 2 ஆண்டுகளுக்கு முன்பே கணவனைக் கொன்றுவிட்டதாக மனைவி ஒப்புக்கொண்டார். ஜிக்னேஷின் சகோதரர் அசோக் தர்மேஷ்பாய் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் ஜிக்னேஷிற்கு விஷம் கொடுத்துக் கொலை செய்து தொழிற்சாலை வளாகத்தில் புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி ஜிக்னேஷின் எலும்புக்கூட்டைக் கைப்பற்றினர். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி பிரித்வி மற்றும் அவரது கள்ளக்காதலனை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட இந்தக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.