படப்பிடிப்பில் விஷப்பூச்சி கடி.. ஐசியூவில் பிரபல நடிகர் ராஜேஷ் சர்மா அனுமதி - கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை!

 
ராஜேஷ் சர்மா

'எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' (இதில் தோனியின் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருப்பார்), 'கோஸ்லா கா கோஸ்லா' உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல குணச்சித்திர நடிகர் ராஜேஷ் சர்மா, படப்பிடிப்பின் போது விஷப்பூச்சி கடித்ததில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 'Fauzi' (பௌஜி) திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராஜேஷ் சர்மா ஹைதராபாத் சென்றிருந்தார்.

அங்கு அடர்ந்த செடி, கொடிகள் நிறைந்த ஒரு பகுதியில் உள்ளூர் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவரது வலது காலில் ஏதோ ஒரு பூச்சி கடித்ததை உணர்ந்துள்ளார். அது ஏதேனும் சாதாரணப் பூச்சியாகவோ அல்லது விஷமுள்ள சிலந்தியாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடக்கத்தில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாததால், ராஜேஷ் சர்மா அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

பூச்சி கடித்துச் சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு, அவரது வலது காலில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும், அவர் கொல்கத்தா திரும்புவதற்காக விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால், விமானப் பயணத்தின் போது விஷம் உடல் முழுவதும் பரவத் தொடங்கியதால் அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, மூச்சு விடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். கொல்கத்தா வந்தடைந்ததும் தாகுரியாவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அவர் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையிலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே நீடித்து வருகிறது. விஷப்பூச்சி கடித்ததால் ஏற்பட்ட தொற்றுஅவரது கால்விரல்களில் இருந்து முழங்கால் வரை மிக வேகமாகப் பரவியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட கால் பகுதி முழுவதும் பெரிய அளவிலான கொப்புளங்கள் தோன்றி கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ரத்தத்தில் விஷம் கலந்ததன் எதிரொலியாக அவருக்குத் தொடர்ந்து கடுமையான மூச்சுத்திணறல் நீடித்து வருவதால், அவர் ஐசியூ-வில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜேஷ் சர்மாவின் இந்தத் திடீர் உடல்நலக்குறைவு குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பரான நடிகை சுதிபா சாட்டர்ஜி தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். "ராஜேஷ் சர்மா அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்றும், மருத்துவர்கள் அவருக்குத் தேவையான அனைத்து அவசரக் காலப் பரிசோதனைகளையும், தீவிர சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்த அடுத்தகட்ட மருத்துவ அறிக்கை நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.