பெத்த மகன்கள் யாருமே கவனிக்கல... தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு சோகச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வசித்து வருபவர் மாயாண்டி (72), இவரது மனைவி முத்துலட்சுமி (65). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்தும், அவர்கள் பெற்றோர்களைத் தங்களின் வீடுகளில் சேர்த்துப் பராமரிக்காமல் கைவிட்டுத் தனியாக அலைக்கழிய விட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த தங்களின் சொந்த ஊரிலேயே ஒரு சிறிய வாடகை வீட்டில் யாருடைய ஆதரவும் இன்றித் தனியாக வசித்து வந்துள்ளனர். தங்களைக் கவனித்துக் கொள்ளப் பெற்ற பிள்ளைகளே முன்வராததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி அன்றாடம் வேதனையில் கண்ணீர் வடித்துள்ளனர். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாயாண்டி மற்றும் முத்துலட்சுமி ஆகிய இருவரும் தங்களின் வீட்டில் விஷம் குடித்து விபரீத முடிவெடுத்துள்ளனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது இருவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உசிலம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற பிள்ளைகள் இருந்தும் ஆதரவின்றி மாண்ட இந்த துயரச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
