பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த நபர், தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் துப்பாக்கிச் சுடு நடத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் உப்பரபாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (35), பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து அவர் வீடு திரும்பியபோது, ஆஸ்பத்திரி வளாகத்தில் மறைந்திருந்த நபர் தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.
உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த ராஜேஸ்வரிக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொன்னேரி போலீசார் தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். விசாரணையில், பெண் ஊழியருக்குத் தீ வைத்தது பிரகாஷ் என்பது தெரியவந்தது.
பொன்னேரி சுடுகாட்டில் பதுங்கியிருந்த பிரகாஷைப் பிடிக்கச் சென்றபோது, அவர் எஸ்.ஐ. தமிழரசனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து, ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டார். இதில் காலில் காயமடைந்து சுருண்டு விழுந்த பிரகாஷ், அரிவாள் வெட்டில் காயமடைந்த எஸ்.ஐ. தமிழரசன் இருவரும் மீட்கப்பட்டுத் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
