‘போராட்டத்தின் போது மாணவியை அறைந்ததற்காகக் காவலரை களங்கப்படுத்த முடியாது’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

 
டெல்ல் நீட்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண் ஒருவரை அறைந்த குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், அரசு அதிகாரியின் நற்பெயரைக் கெடுக்கும் செயல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து அவர் ஜந்தர் மந்தர் காவல் பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.

டெல்லி தடியடி

இந்நிலையில், கடந்த ஆண்டு ரமலான் பண்டிகையின் போது தங்களைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்தது தொடர்பாகத் தாக்கல் செய்த வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த சந்தீப் லம்பா ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு அறிக்கை தாக்கல் செய்ததாக 68 வயது மூதாட்டி ஒருவர் மனுத் தாக்கல் செய்தார்.

பெண்ணை அறைந்த வீடியோ பரவி வருவதால் சந்தீப் லம்பாவின் நடுநிலைத் தன்மை சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகவும், எனவே தனது வழக்கை விசாரிக்க வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கிரீஷ் கத்பாலியா, மனுதாரரின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் முக்கிய கருத்துகளையும் வெளியிட்டுள்ளது. 

டெல்லி நீட்

"ஒரு வீடியோவில் பெண்ணை அறைந்ததாகக் காட்சிப்படுத்தப்பட்டதற்காக மட்டுமே ஒரு காவலரை நாம் களங்கப்படுத்த முடியாது. களத்தில் நிலவிய உண்மையான யதார்த்தங்கள் நமக்குத் தெரியுமா? போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றிருந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுப் பல உயிர்கள் பலியாகி இருக்கும்."

"போராட்டம் நடத்துவதற்கு அடிப்படை உரிமை உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் நிலைக்குச் செல்லக் கூடாது. கூட்டத்தைக் கையாண்ட விதம் அதிகார துஷ்பிரயோகமாகவே இருந்தாலும், அவரை மட்டுமே ஒட்டுமொத்தமாகக் களங்கப்படுத்த முடியாது. அவருக்கும் நியாயமான விசாரணைக்கான உரிமை உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் அவர் ஒருதலைப்பட்சமாகத் தான் செயல்படுவார் என்று கூற முடியாது. அரசு அமைப்புகளின் நற்பெயரைக் கெடுக்கும் போக்கை நிறுத்துங்கள்" என நீதிபதி கண்டித்தார்.