அதிர்ச்சி வீடியோ... பாலியல் குற்றவாளிக்கு கேக் ஊட்டிய போலீசார்... நடுரோட்டில் பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாட்டம்!

 
maharastra maharastra


சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரே, ஒரு பாலியல் குற்றவாளியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று அவருக்குக் கேக் ஊட்டிய சம்பவம் மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பரத்வாடா பகுதியைச் சேர்ந்த அயான் அகமது என்பவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் உள்ளன. இன்ஸ்டாகிராமில் 18,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள இவர், தனது சமூக ஊடகப் பிரபலத்தைப் பயன்படுத்திப் பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்ததாகப் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வரும் அந்த வீடியோவில், அயான் அகமது 'பாஸ்' என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்து, நள்ளிரவில் பொதுச் சாலையை மறித்து, நடுரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டுகிறார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், அந்த அத்துமீறலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன், ஒரு காவல்துறை அதிகாரி குற்றவாளிக்குக் கேக் ஊட்டி வாழ்த்துத் தெரிவிக்கிறார்.

இந்தச் சம்பவத்தின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு, மிரட்டல் விடுக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர்.இந்த வீடியோ வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "குற்றவாளிகளுக்குக் காவல்துறையே துணை போகிறதா?" எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பொது இடத்தில் இடையூறு விளைவித்தது மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அயான் அகமது மீது கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.