காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் ராஜபாண்டி தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை!
சென்னை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம், சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராஜபாண்டி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார். சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தலைமை காவலர் ராஜபாண்டி திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாண்டி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இது குறித்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் போலீசார், ராஜபாண்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகத் தலைமை காவலர் ராஜபாண்டியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா அல்லது குடும்பப் பிரச்சினை அல்லது உடல்நலக் குறைவு காரணமா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
