திமுக நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் போலீஸ் சோதனை.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

 
திமுக

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரின் வீட்டில், நள்ளிரவில் காவல்துறையினர் சோதனை நடத்தியதுடன் அவரைக் கைது செய்ய முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, சமூக வலைத்தள விவாதங்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த போடம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அன்பானந்தம். இவர் திமுகவின் ஒருங்கிணைக்கும் 'Gen Z திமுக ஒருங்கிணைப்புக் குழு'வில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டிற்குத் திரண்ட காவல்துறையினர், திடீரென உள்ளே நுழைந்து சோதனையிட முயன்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அன்பானந்தத்தின் பெற்றோரிடம், "அன்பானந்தத்தை எங்களுடன் அனுப்பி வையுங்கள்" எனக் கூறி காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, போலீஸார் வீட்டின் உள்ளே புகுந்து தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குத் திமுகவினர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தவெக அரசு மற்றும் முதலமைச்சரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அன்பானந்தம் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்ததே இந்த நள்ளிரவு சோதனைக்குக் காரணம் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

அரசை விமர்சிப்பவர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே, காவல்துறை பழிவாங்கும் நடவடிக்கையாக நள்ளிரவில் அத்துமீறிச் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் திமுகவினர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் காரணமாகக் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை பகுதியில்  பதற்றம் நிலவி வருகிறது.