மலை உச்சியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற பிளஸ் 2 மாணவி - பத்திரமாக மீட்ட போலீசார்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில், மருத்துவப் படிப்பு படிக்க முடியாத விரக்தியில் மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்ய முயன்ற பள்ளி மாணவியை காவல்துறையினர் விரைந்து சென்று பத்திரமாக மீட்டுள்ளனர்.
இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 வணிகப் பிரிவு படித்து முடித்துள்ளார். அவருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க ஆசை இருந்தபோதிலும், வணிகப் பிரிவு எடுத்ததால் நீட் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது; இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

விரக்தியடைந்த அந்த மாணவி, இடுக்கியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பருந்துப்பாறை மலை உச்சிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அந்தப் பகுதியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், மாணவி மலை உச்சியின் ஆபத்தான பகுதிக்குச் செல்வதைக் கவனித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியிடம் சாமர்த்தியமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் ஆறுதலான பேச்சால் மனம் மாறிய மாணவி தனது தற்கொலை முடிவைக் கைவிட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
