5-வது நாளாக சிறுமியைத் தேடும் போலீசார்... 7 தனிப்படைகள் அமைப்பு - தீவிரத் தேடுதல் வேட்டை!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியில் காணாமல் போன 7 வயது சிறுமியைத் கண்டுபிடிக்கக் காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12-ம் தேதி அதிகாலையில் திடீரெனக் காணாமல் போன சிறுமி குறித்து எந்தவொரு துப்பும் கிடைக்காததால், காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டு தற்போது கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 7 தனிப்படைகள் மூலம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உடனிருந்த உறவினர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாகக் கைப்பற்றி, சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்து நாட்களைக் கடந்தும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காதது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
