நடுரோட்டில் கணவர் பிறந்தநாள் கொண்டாட்டம்... பெண் போலீஸ் ஏட்டு அட்ராசிட்டி!

 
பிறந்தநாள் பிறந்தநாள்

சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் பெண் போலீஸ் ஏட்டாகப் பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி. இவருடைய கணவர் பெருமாள் என்பவருக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்தது. இதையொட்டி கணவரின் பிறந்தநாளை பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் வைத்து அவர் விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.

இந்தக் கொண்டாட்டத்தின் போது புவனேஸ்வரி தனது கணவருக்குப் பிறந்தநாள் பரிசாகப் பெரிய அளவிலான தங்கச் சங்கிலி ஒன்றை கழுத்தில் அணிவித்தார். தொடர்ந்து பெருமாள் தனது மனைவியைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது.

கணவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட அந்த தங்கச் சங்கிலி 15 பவுன் எடை கொண்டது என்ற தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பெண் போலீஸ் ஏட்டு புவனேஸ்வரிக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.