நாளை தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. பாலவாக்கத்தில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

 
போலியோ சொட்டுமருந்து குழந்தை  மருந்து

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் நாளை ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் மாபெரும் முகாம் நடைபெற உள்ளது. சென்னை பாலவாக்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் இந்த முகாமை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இந்த முதன்மையான மக்கள் நல்வாழ்வு திட்டத்திற்கான தொடக்க விழா  சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை காலை நடைபெறுகிறந்து. இந்த சிறப்பு முகாமில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்துகளை வழங்கி முகாமைத் தொடங்கி வைக்கிறார்.

போலியோ

முதலமைச்சர் பங்கேற்க உள்ளதைத் தொடர்ந்து, பாலவாக்கம் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரத்யேகப் பாதுகாப்பு மற்றும் மேடைப் பந்தல் ஏற்பாடுகளைச் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் விடுபடாமல் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 52.91 லட்சம் குழந்தைகளுக்கு நாளை ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதும் 43,051 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் செயல்படும்.

போலியோ சொட்டு மருந்து

பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தற்காலிக சொட்டு மருந்து மையங்கள் நாளை முழு வீச்சில் இயங்கும். பேருந்து அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத தொலைதூர கிராமங்கள், எளிதில் சென்றடைய முடியாத காட்டுப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்காகப் பிரத்யேக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் நேரடியாகச் சென்று குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்குவதை உறுதி செய்யும்.

தேசிய போலியோ ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்தச் சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது என்பதால், பொதுமக்கள் நாளை தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தவறாமல் அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.