அரசியல் வட்டாரத்தில் உச்சகட்டப் பரபரப்பு - இன்று பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு!

 
அண்ணாமலை அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியின் தேசியத் தலைவரைச் சந்தித்துத் தனது விலகல் கடிதத்தை அளிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இந்திய அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் தமிழக அரசியலில் பெரும் புய கிளப்பியுள்ளன.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவில் பணியாற்றி வந்த தன் பதவியை 2019-இல் ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாஜகவில் இணைந்த அவர், கடந்த 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக மாநிலத் தலைவராக அதிரடி அரசியலை மேற்கொண்டார். எனினும், கடந்த ஆண்டு (2025) மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டார். அதன் பின்னர் கட்சித் தலைமையில் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால், அவர் கடந்த சில காலமாகவே கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அண்ணாமலை

தற்போது டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது அதிகாரப்பூர்வக் கடிதத்தை அவர் மேலிடத்திடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அவரது அதிருப்தியைப் போக்க அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்க பாஜக மேலிடம் முன்வந்ததாகவும், ஆனால் மக்கள் மத்தியில் இருந்து பணியாற்ற விரும்புவதால் அந்த வாய்ப்பை அவர் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவில் இருந்து முறைப்படி விலகிய பிறகு, அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக முதற்கட்டமாக ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. பின்னர், அதனை ஒரு முழுநேர அரசியல் கட்சியாக மாற்றித் தமிழக அரசியலில் தடம் பதிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகப் பரவலான செய்திகள் வெளியாகி வருகின்றன.

அண்ணாமலை

டெல்லிக்குப் புறப்படும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் புதிய கட்சித் தொடக்கம் குறித்துக் கேட்டபோது, “இன்னும் இரண்டு நாட்களில் அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவாகப் பதிலளிக்கிறேன்” எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

காரில் பாஜக கொடி நீக்கப்பட்டது முதல் டெல்லி பயணம் வரை அண்ணாமலையைச் சுற்றி அரங்கேறும் இந்த அதிரடி நகர்வுகள், தமிழகத்தில் ஏற்கனவே தவெக - திமுக இடையே அரசியல் யுத்தம் நடந்து வரும் சூழலில், புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.