பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் ஊழியர் உயிரிழப்பு!

 
பொன்னேரி

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த உப்பரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கணினி பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி மாலை பணி முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றபோது, அங்கு வந்த மாதவரம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ் என்பவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

அப்போது ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு பிரகாஷ் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்ட ராஜேஸ்வரி, முதலில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பொன்னேரி அருகே மயானப் பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் பிரகாஷின் காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுமார் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜேஸ்வரி உயிரிழந்ததை தொடர்ந்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை போலீசார் தற்போது கொலை வழக்காக மாற்றியுள்ளனர். இந்த சம்பவத்துக்கான முழுமையான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.