₹15,000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார் பதிவாளர் உட்பட 3 பேர் கைது - லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை!
பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை ஆவணங்களை வழங்க ₹15,000 லஞ்சம் வாங்கியதாகப் பொன்னேரி சார் பதிவாளர் உட்பட மூன்று பேரைத் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், பொன்னேரி தாலுகா சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டுமனைகளை வாங்கிப் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வழங்கச் சார் பதிவாளர் சங்கர் ₹20,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். போலிஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ₹15,000 ரொக்கப் பணத்தை நடராஜன் எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை துணைப் போலிஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரசாயனம் தடவிய பணத்தைப் பெற்ற சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் உதவியாளர் நித்யா ஆகிய 3 பேரையும் போலிஸார் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
