பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ கட்டணம் வெளியானது! டிக்கெட் ரூ.40 தான்!
சென்னையில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவைக்கான பயணக் கட்டணம் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த மஞ்சள் வழித்தடத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இந்த மெட்ரோ வழித்தடம் சுமார் 14.6 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை முழுமையாக பயணம் செய்தால் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும்.

பூந்தமல்லியில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான பயணத்துக்கு ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அய்யப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் மூலைக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரூ.30 கட்டணப் பிரிவில் சேவை வழங்கப்படுகிறது.
பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து பூந்தமல்லி பெருவழிச்சாலை வரையிலான குறுகிய பயணத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ வழித்தடம் சென்னை மெட்ரோவின் 2-ம் கட்டத் திட்டத்தில் முக்கியமான பகுதியாகும். இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்குவதற்கான பாதுகாப்பு அனுமதிகள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள நிலையில், சேவை தொடக்கத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தகவலின்படி, பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான இந்த வழித்தடம் அக்டோபர் 11-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் உள்ளிட்ட மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மெட்ரோ மூலம் நகரின் முக்கிய பகுதிகளுக்கு பயணம் செய்யும் வசதி கிடைக்கும்.
இதனால், பூந்தமல்லி-வடபழனி இடையே தினசரி பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு புதிய மெட்ரோ சேவை பயண நேரத்தைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
