குட் நியூஸ்! நாளை முதல் பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் நாளை (அக்டோபர் 11) பயணிகள் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
சுமார் 14.6 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடம், சென்னையின் மேற்கு புறநகர் பகுதிகளிலிருந்து வடபழனி வரை பயணிக்க உதவும். தொடக்கத்தில் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் பயணிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளன. பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகியவை இந்த நிலையங்களாகும்.

அக்டோபர் 11-ம் தேதி தொடக்க நாளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திங்கள் முதல் வழக்கமான பயணிகள் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உச்ச நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில் சேவை இருக்கும்.

இந்த வழித்தடத்தில் மொத்தம் 17 நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தொடக்கத்தில் 11 நிலையங்கள் மட்டுமே பயன்பாட்டுக்கு வருகின்றன. இரட்டை அடுக்கு கட்டமைப்புப் பகுதியில் உள்ள ஆறு நிலையங்கள் பின்னர் திறக்கப்பட உள்ளன. இதனால் பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வடபழனி செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய வழித்தடத்தில் பயணம் செய்யத் திட்டமிடுவோர், புறப்படும் நேரம் மற்றும் திறக்கப்பட்டுள்ள நிலையங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு பயணத்தைத் திட்டமிடுவது நல்லது.
