பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? ₹10 முதல் ₹40 வரை – முழு விவரம்
சென்னையில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் இன்று (அக்டோபர் 11) தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டண விவரங்களும் வெளியாகியுள்ளன. குறைந்தபட்சக் கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சக் கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை பயணம் செய்ய ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் காட்டுப்பாக்கம் ஆகிய நிலையங்களுக்குச் செல்ல ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய நிலையங்களுக்குச் செல்ல ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும். பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை முழுப் பயணத்துக்கு ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. புதிய வழித்தடம் மூலம் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வடபழனிக்குச் செல்வோருக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும்.

புதிய வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்திய கட்டணம் மற்றும் சேவை நேரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
