தரமற்றவை... எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயம் விற்பனைக்குத் தடை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
எவரெஸ்ட் எல்ஜி பெருங்காயம்

இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பிராண்ட் பெருங்காயப் பொருட்கள் தரமற்றவை என உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவற்றை விற்பனை செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.

பெருங்காயத்தின் தரம் குறித்து நுகர்வோர் தரப்பிலிருந்து வந்த புகார்களை அடுத்து, முதன்மை ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் எவரெஸ்ட் மற்றும் எல்ஜி ஆகிய இரு நிறுவனங்களின் கலப்பு பெருங்காயப் பொருட்களும் தரமற்றவை என்பது அறிவியல் பூர்வமாகக் கண்டறியப்பட்டது. எவரெஸ்ட் பெருங்காயப் பொருளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவான சத்துகள் இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவரெஸ்ட்

எல்ஜி மூலப்பொருள் பெருங்காயத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஸ்டார்ச் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இவ்விரு பெருங்காயங்களிலும் குறைந்தபட்சம் 5 சதவீதம் இருக்க வேண்டிய ஆல்கஹால் கரையக்கூடிய சாறு, வெறும் 0 முதல் 3 சதவீதம் மட்டுமே இருந்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தரமற்ற தயாரிப்புகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது. மேலும், முறைகேடுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.