பூரி குர்மாவில் செத்த பல்லி... புகாரளித்த வாடிக்கையாளருக்கு அலட்சிய பதிலளித்த டிபன் சென்டருக்கு அதிரடி சீல்!

 
poori

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல டிபன் சென்டரில் முஸ்தபா என்ற வாடிக்கையாளர் பூரி பார்சல் வாங்கியுள்ளார். அவர் பார்சலை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதற்காகத் தட்டில் குர்மாவைப் பரிமாறியபோது, அதில் செத்த நிலையில் பெரிய பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உணவகத்திற்குச் சென்று முறையற்ற சுகாதாரம் குறித்துக் கேள்வி எழுப்பிய முஸ்தபாவிடம், உரிமையாளர் மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். பல்லியை மட்டும் தனியாக எடுத்துவிட்டு மீதமுள்ள உணவைச் சாப்பிடுமாறு திமிராகப் பேசிய உரிமையாளரின் பேச்சு பாதிக்கப்பட்டவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

வாடிக்கையாளர்களின் உயிரோடு விளையாடும் உணவக உரிமையாளரின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த முஸ்தபா, உடனடியாகப் புரோட்டத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சுகாதாரமின்றிச் செயல்பட்ட அந்த டிபன் சென்டருக்கு அதிரடியாகச் சீல் வைத்தனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் முறையான தொடர் ஆய்வுகள் இல்லாததே இதுபோன்ற ஆபத்தான சம்பவங்களுக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் கடைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உணவகங்களில் இதுபோன்ற விபரீதங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் தீவிர சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனக் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பொதுமக்களின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர். அதிகாரிகளின் இந்த உடனடிச் சீல் வைப்பு நடவடிக்கை அப்பகுதியில் உள்ள பிற உணவக உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.