பிரபல நடிகை, நாட்டுப்புறக் கலைஞர் மது காம்பிகர் காலமானார் - திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்!

 
மது காம்பிகர்

நீண்டகாலமாகத் தொடர்ந்த கடுமையான உடல்நலக் குறைவு காரணமாகப் புனே நகரில் நடிகையும், நாட்டுப்புற கலைஞருமான மது காம்பிகர் அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73.

கலை உலகிற்கு அவர் ஆற்றிய மாபெரும் பங்களிப்பின் காரணமாக மறைந்த இவருக்குப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு மராத்தி நாடக, திரைப்பட மற்றும் கலைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்து காம்பிகர் தனது இளமைக்காலத்திலேயே கலைத்துறையின் மீது கொண்ட அதீத பற்று காரணமாகத் தனது கலைப் பயணத்தை நாடக மேடைகளில் இருந்து தொடங்கினார். ஆரம்பக் காலத்தில் பல்வேறு நாடகக் கம்பெனிகளில் நடித்து வந்த இவர், தனது இயல்பான நடிப்புத் திறமையாலும், கவரும் மேடை ஆளுமையாலும் குறுகிய காலத்திலேயே நாடக உலகினரின் கவனத்தை ஈர்த்தார். மேடை நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்ட இவர், பிற்காலத்தில் மராத்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பல்வேறு ஊடகத் துறைகளிலும் கால் பதித்துத் தனது முத்திரையைப் பதித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலை வடிவங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது 'லாவணி' நடனமாகும். இந்தத் பாரம்பரியக் கலையை வெறும் கேளிக்காகப் பார்க்காமல், அதன் உண்மையான ஆன்மாவுடனும் கலை நேர்த்தியுடனும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மது காம்பிகர் மிக முக்கியப் பங்காற்றினார். மகாராஷ்டிர கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும் லாவணி நடன நிகழ்ச்சிகளை நடத்தி இக்கலைக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இளம் கலைஞர்களுக்கு இவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

மேடை நாடகங்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் மட்டுமல்லாமல், வெள்ளித்திரையிலும் மது காம்பிகர் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துத் தன் திறமையை நிரூபித்துள்ளார். குறிப்பாக, விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவுமான ‘ஷாபித்’ மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் ஜபார் படேலின் இயக்கத்தில் வெளியான ‘ஏக் ஹோதா விதூஷக்’ உள்ளிட்ட பல முன்னணி மராத்தி திரைப்படங்களில் இவர் நடித்துப் புகழ்பெற்றார். இத்திரைப்படங்களில் இவரது நடிப்புத் திறன் பரவலாகப் பாராட்டப்பட்டதுடன், இவருக்குத் திரைப்படத் துறையில் தனி இடத்தையும் பெற்றுத் தந்தது.

தனது நீண்ட கலைப் பயணத்தின் உச்சத்தில் இருந்த மது காம்பிகருக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாகப் பக்கவாதம் ஏற்பட்டது. இந்தத் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வந்த அவர், பொதுவெளியில் கலந்துகொள்வதைக் குறைத்துக்கொண்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் முந்தைய பக்கவாதத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாகப் புனேவில் நேற்று அவர் காலமானார்.

மது காம்பிகரின் மறைவுச் செய்தி வெளியானதை அடுத்து, மராத்தி திரைப்படத் துறை சார்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலையைக் கட்டிக் காப்பதில் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் கலைஞர் மறைந்துவிட்டதாகப் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். அவரது மறைவு மராத்தி பண்பாட்டு உலகிற்குப் பேரிலப்பாகும்.