பிரபல சின்னத்திரை நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
நடிகை சஞ்சிதா உகாலே நடிகை சஞ்சிதா உகாலே

பிரபல இந்தித் தொலைக்காட்சித் தொடர்களான 'கும்கும் பாக்யா' மற்றும் 'வாக்லே கி துனியா' உள்ளிட்ட தொடர்களில் நடித்துப் பிரபலமடைந்த நடிகை சஞ்சிதா உகாலே, மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளது திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அறியப்பட்ட சஞ்சிதா உகாலே, மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபாரா பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது வீட்டில் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இந்தத் திடீர் முடிவு இந்தித் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சஞ்சிதா உகாலே

இளம் வயதிலேயே நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்து கொண்டதற்கான துல்லியமான காரணம் என்ன என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தத் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினைகள் காரணமா அல்லது திரைத்துறை சார்ந்த ஏதேனும் மன அழுத்தங்கள் காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை சஞ்சிதா உகாலே

மிகவும் இளம் வயதிலேயே சஞ்சிதா உகாலேவின் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வந்ததை அடுத்து, அவருடன் நடித்த சக சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.