தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் - பிரபல யூடியூபர் கைது!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை வேறு கட்சிக்கு மாறுமாறு வற்புறுத்தி, அதற்குப் பல கோடி ரூபாய் பேரம் பேசிய புகாரில் யூடியூபர் 'IPDS' திருநாவுக்கரசு சென்னை காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைத் தரப்பில் வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்களின்படி, தவெக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவைத் தற்போதைய ஆளுங்கட்சியிலிருந்து விலகி, வேறு ஒரு முக்கிய அரசியல் கட்சிக்கு மாறுமாறு யூடியூபர் திருநாவுக்கரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கட்சி மாறுவதற்காகப் பல கோடி ரூபாய் பணத்தை ஆசை வார்த்தையாகக் காட்டியது மட்டுமின்றி, அதற்கு இணங்க மறுத்த சட்டமன்ற உறுப்பினருக்குத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகத் தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் கிடைத்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசைத் தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
