பிச்சைக்காரராக மாறிய பிரபல யூடியூபர்... 8 மணி நேரத்தில் ரூ.4,000 வசூல்!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற புகழ்பெற்ற காவடி திருவிழாவின் போது, பிச்சைக்காரர்களின் அன்றாட வருமானத்தைக் கண்டறியும் நோக்கில் யூடியூபர் சச்சின் மேற்கொண்ட வினோத சமூகப் பரிசோதனை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சச்சின் என்ற அந்த யூடியூபர் கிழிந்த ஆடைகளை அணிந்து, கையில் பிச்சைப் பாத்திரத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி 'UPI QR கோடு' அச்சிடப்பட்ட அட்டைப் பலகையை ஏந்தியபடி பிச்சைக்காரர் அவதாரத்தில் களமிறங்கினார்.
திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் பலரும் பரிதாபப்பட்டு ரொக்கப் பணமாகவும், சிலர் தங்களது செல்போன் மூலம் QR கோடை ஸ்கேன் செய்தும் நிதியுதவி அளித்துள்ளனர்.
வெறும் 8 மணி நேரத்தில் அவருக்கு ரூ.4,000 ரொக்கம் மற்றும் டிஜிட்டல் பணமாக வசூலானது. இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெரிய தொகை கிடைத்ததைக் கண்டு அவரே வியப்படைந்தார். இந்த பரிசோதனையின் முடிவில் பேசிய சச்சின், "மக்கள் யாரும் உழைக்காமல் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்க முயலக் கூடாது. கடின உழைப்பும் நேர்மையும் மட்டுமே நிலையான வாழ்வைத் தரும்" என்ற விழிப்புணர்வுச் செய்தியை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பிச்சை எடுக்கும் தொழிலில் நடக்கும் புதிய டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து நெட்டிசன்களிடையே பல்வேறு கருத்துகளும் காரசாரமான விவாதங்களும் எழுந்துள்ளன.
