ஆபாச விமர்சனங்கள்... சென்னை மேயர் பிரியா கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!
சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துகளைப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மேயர் பிரியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் என்பவர் முதல்வர் விஜயை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசியிருந்தார். அந்த மேடையில் திமுக எம்பி கனிமொழி மற்றும் மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்; அப்போது கனிமொழி அமைதியாக இருக்க, மேயர் பிரியா சிரித்துக் கொண்டிருந்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாகத் தவெக அமைச்சர்களும் கட்சியினரும் திமுக தலைவர்களையும் கனிமொழியையும் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தன்னை இலக்காக வைத்துச் சிலரால் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு மேயர் பிரியா காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது போன்ற செயல்கள் பொதுவாழ்விற்கு வர விரும்பும் இளம் பெண்களுக்கும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் விடுக்கப்படும் நேரடி அச்சுறுத்தல் எனவும் அவர் தனது புகாரில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகச் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
