புனே போர்ஷ் கார் விபத்து... ஜாமீனில் வந்த சிறுவனின் தந்தை பணமாலையுடன் குத்தாட்டம் - கண்டனங்களைக் குவிக்கும் வீடியோ!

 
புனே போர்ஷ் கார் விபத்து புனே போர்ஷ் கார் விபத்து

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நள்ளிரவில் 17 வயது சிறுவன் ஒருவன், தனது சொகுசு போர்ஷ் காரை ஓட்டிச் சென்று மோதியதில் இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் அடுக்கடுக்கான முறைகேடுகள் அம்பலமாகி வந்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சிறுவனின் தந்தை பணமாலையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இரண்டு இளம் உயிர்களைப் பலிவாங்கிய விபத்தில் தொடர்புடைய குடும்பத்தினர், எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றிப் பணத் திமிரைக் காட்டுவதாக நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

விபத்து நடந்த சமயத்தில் கார் ஓட்டிய சிறுவன் மைனர் என்ற காரணத்தைக் காட்டி, 'சாலைப் பாதுகாப்பு குறித்து 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும்' என்ற வினோதமான நிபந்தனையுடன் சிறார் நீதி வாரியம், மிக எளிதாக ஜாமீன் வழங்கிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீவிரப் போலீஸ் விசாரணையில், சிறுவன் மது அருந்தியதை மறைப்பதற்காக அவனது பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் இணைந்து சதியில் ஈடுபட்டது அம்பலமானது. அரசு மருத்துவர்களுக்குப் பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து, சிறுவனின் ரத்த மாதிரிக்கு பதிலாக அவனது தாயாரின் ரத்த மாதிரியை மாற்றியதன் அடிப்படையில் சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் மற்றும் அவனது தாய் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், கடந்த மார்ச் 22-ம் தேதி சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்ததைக் கொண்டாடும் வகையில், சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் தனது கழுத்தில் ரூபாய் நோட்டுகளாலான பணமாலையை அணிந்துகொண்டு, தனது மனைவி மற்றும் விபத்தை ஏற்படுத்திய மகனுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

விபத்து

"பண பலம் இருந்தால் இரண்டு பேரைக் கொன்றுவிட்டுக் கழுத்தில் பணமாலையுடன் கொண்டாடலாமா? இந்தியச் சட்ட அமைப்பை இந்தக் குடும்பம் கேலி செய்கிறது" என்று நெட்டிசன்கள் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும், விபத்து நடப்பதற்கு முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு குடும்ப விழா ஒன்றில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும் சிறுவனின் தரப்பில் மழுப்பலான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இரண்டு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்த ஒரு வழக்கின் முக்கியக் குற்றவாளிகள், சமூகப் பொறுப்பின்றித் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது புனே மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.