மூத்த குடிமக்களுக்கு வருடத்துக்கு ரூ.2.46 லட்சம் வட்டி வருமானம் - அஞ்சலகத்தின் அசத்தலான திட்டம்!
ஓய்வுக்காலத்தில் மூத்த குடிமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தற்சார்புடன் கவனித்துக் கொள்ளவும், நிலையான வட்டி வருமானத்தைப் பெறவும் இந்திய அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பெருமளவில் உதவி வருகிறது.
மத்திய அரசால் ஆதரவளிக்கப்படும் இத்திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% என்ற கவர்ச்சிகரமான வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

60 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேரத் தகுதியானவர்கள் விசிஆர்/விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்குச் சில நிபந்தனைகளுடன் விலக்கு உண்டு. இத்திட்டத்தில் அதிகபட்ச வரம்பான ரூ.30 லட்சத்தை முதலீடு செய்யும் போது கிடைக்கும் வருமானக் கணக்கீடு:
ரூ.30 லட்சத்திற்கு 8.2% வட்டி வீதம் கணக்கிட்டால் ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி வருமானமாகக் கிடைக்கும். இது மாத அடிப்படையில் பார்த்தால் சராசரியாக ரூ.20,500 ஆகும்.

இருப்பினும், இந்த வட்டித் தொகை மாதந்தோறும் வழங்கப்படாது. ஒவ்வொரு நிதியாண்டின் காலாண்டுக்கு ஒருமுறை (Quarterly - ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களின் முதல் நாளில்) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
ஓய்வூதியத்திற்குப் பிறகான பணத்தைச் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து, எந்தவித அபாயமும் இன்றி நிலையான வருமானம் பெற விரும்புவோருக்கு இந்த அஞ்சலகத் திட்டம் மிகச் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.
