நடுவானில் விமானத்தில் பயங்கரம்... பவர் பேங்க் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!
சண்டிகர் விமான நிலையத்தில் இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்றில் பவர் பேங்க் திடீரென வெடித்துத் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து சண்டிகர் நோக்கி வந்த இந்த விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கிய சில நிமிடங்களில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதனால் விமானத்தின் உட்பகுதியில் அடர்ந்த புகை சூழ்ந்ததால் பயணிகள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கும் பயத்திற்கும் உள்ளாகினர்.
விபத்து நேரிட்ட உடனே சுதாரித்துக் கொண்ட விமானப் பணியாளர்கள், அவசரக்கால வழிகள் வழியாகப் பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது இந்த வெடிப்பு நிகழ்ந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் விமானங்களில் லித்தியம் பேட்டரி கொண்ட பவர் பேங்குகளை எடுத்துச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு சோதனைகளில் எங்கே தவறு நடந்தது என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
