ரயிலில் திடீரென வெடித்த பவர் பேங்க்... தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் செல்போனை சார்ஜ் செய்தபோது, பவர் பேங்க் திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டது. கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை வழியாக வந்த ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இரவு 10.40 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது பொதுப் பெட்டியில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனை பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்துள்ளார். திடீரென அந்த பவர் பேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இரவு நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்தனர்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. சோதனைக்குப் பிறகு ரயில் மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதற்கிடையே, ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்டுகளை அணைக்க வேண்டும் என்ற விதிமுறையை அனைத்து மண்டலங்களும் முறையாகப் பின்பற்ற ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
