நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு!
பசிபிக் பெருங்கடலின் 'நெருப்பு வளையம்' பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.3 ஆகப் பதிவானதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபியோர்ட்லேண்ட் பகுதியின் நுழைவாயிலாகக் கருதப்படும் 'தே அனாவ்' நகரத்திற்கு வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சுமார் 51 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிகக் கொடூரமாக இருந்ததால், வீடுகள் மற்றும் வணிக வளாகக் கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 3.3 முதல் 4.3 ரிக்டர் அளவிலான தொடர் அதிர்வுகளும் பதிவாகின. நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை உடனடியாகப் புயல் வேகத்தில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. மில்ஃபோர்ட் சவுண்ட் முதல் புய்செகுர் பாயிண்ட் வரையிலான மேற்கு கடற்கரைப் பகுதி மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு அல்லது உள்பகுதிகளுக்குச் செல்லுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடலோரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.
நிலநடுக்கத் தரவுகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் நியூசிலாந்தின் ஜியோநெட் ஆகியவை இந்த நிலநடுக்கத்தின் அளவை 5.9 ஆகக் குறைத்து மதிப்பிட்டன.

நிலநடுக்கத்தின் வீரியம் முதலில் கணிக்கப்பட்டதை விடக் குறைவாக இருந்ததால், ஆபத்து நீங்கியதை அடுத்து தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை சுனாமி எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றது. எனினும், கடல் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான வலுவான நீரோட்டங்கள் மற்றும் அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தற்காலிகமாகக் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கினாலும், தற்போதைய நிலவரப்படி பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களோ அல்லது கடுமையான உள்கட்டமைப்பு பாதிப்புகளோ ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும்.
