சபாநாயகராகும் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!

 
பிரபாகர் பிரபாகர்

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று தனது வேட்புமனுவைத் தலைமைச் செயலகத்தில் தாக்கல் செய்தார். இன்று மாலை 4 மணியுடன் மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அவரைத் தவிர வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றிச் சபாநாயகராகத் தேர்வாகிறார்.

இதனைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவிக்குத் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா நாளை முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஜே.சி.டி. பிரபாகர், நடந்து முடிந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்க உள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு முதலமைச்சர் விஜய் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட அவர், பேரவை நடவடிக்கைகளை நடுநிலையோடு நடத்துவார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை நடைபெறும் கூட்டத்தொடரில் அவர் முறைப்படி சபாநாயகர் இருக்கையில் அமர்த்தப்படுவார். இதற்கான ஏற்பாடுகள் சட்டமன்ற வளாகத்தில் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன.