பிராக் சர்வதேச செஸ் போட்டி... இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் அபார வெற்றி!
செக் குடியரசின் பிராக் நகரில் நடைபெற்று வரும் பிராக் சர்வதேச செஸ் திருவிழா 2026 தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு (2025) இதே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம், இந்த ஆண்டும் நடப்பு சாம்பியனாகக் களம் இறங்கியுள்ளார்.
ஹான்ஸ் நீமானுக்கு எதிரான ஆட்டம்: தொடரின் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் நட்சத்திர வீரர் ஹான்ஸ் நீமானை அரவிந்த் சிதம்பரம் எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த், ஆட்டத்தின் 31-வது நகர்வில் ஒரு சிறிய தவறு செய்தாலும், நேர நெருக்கடியில் இருந்த நீமானின் தவறுகளைச் சாதகமாக்கிக் கொண்டு 53-வது நகர்வில் வெற்றியை உறுதி செய்தார்.

முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அப்துசட்டோரோவிடம் தோல்வியடைந்த அரவிந்த், இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளார். தற்போது 2 சுற்றுகளின் முடிவில் 1 புள்ளியுடன் அவர் நான்காவது இடத்தில் உள்ளார்.
உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கத் தயாராகி வரும் குகேஷ், தனது இரண்டாவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோயேவை எதிர்கொண்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். குகேஷ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளுமே 'டிரா'வில் முடிந்துள்ளன.

சேலஞ்சர்ஸ் பிரிவில் விளையாடி வரும் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், தனது இரண்டாவது சுற்றில் ஹங்கேரியின் பெஞ்சமின் கிளிடுராவுடன் விளையாடி ஆட்டத்தைச் சமன் செய்தார்.
மூன்றாவது சுற்றில் அரவிந்த் சிதம்பரம் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவையும், குகேஷ் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரஸ்டையும் எதிர்கொள்ள உள்ளனர். அரவிந்த் சிதம்பரம் தனது பட்டத்தைத் தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய செஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
