நடிகனை பிடித்தால் விசில் அடித்து கொண்டாடலாம்; நாட்டை கொடுக்க முடியுமா?... நடிகர் பிரகாஷ்ராஜ் !
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தற்போதைய தேர்தல் என்பது திராவிட மாடல், அடிமை மாடல் மற்றும் சினிமா மாடல் ஆகிய 3 மாடல்களுக்கு இடையேயான போட்டி என்று குறிப்பிட்டார். திராவிட மாடல் கல்வி மற்றும் மொழி உரிமையைக் காத்த நிலையில், அடிமை மாடல் நமது சுயமரியாதையை அடகு வைப்பதாக அவர் கடுமையாகச் சாடினார்.

சினிமா மாடல் குறித்துப் பேசிய பிரகாஷ்ராஜ், திரையில் மருத்துவர் அல்லது பொறியாளர் என எந்த வேடமும் ஏற்கலாம், ஆனால் அரசியலுக்கு வந்த உடனே முதலமைச்சர் ஆகிவிட முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். நடிகர் விஜய் இதுவரை தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்ததுண்டா என்றும் அவர் வினவினார். சினிமாவில் காட்டும் திறமைக்காக மக்கள் காட்டும் அன்பை அரசியலுக்குப் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர்களைப் பார்த்தால் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டாடலாம், ஆனால் அதற்காக நாட்டை அவர்களிடம் ஒப்படைக்க முடியுமா என்று அவர் ஆவேசமாகப் பேசினார். இந்தத் தேர்தல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையேயான போர் என்று அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் தன்மானத்தைக் காக்க திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று கூறி அவர் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
