"காமராஜரைப்போல ஸ்டாலினும்..." நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்புப் பதிவு!

 
prakashraj prakashraj

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 2026 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில், வரலாற்றின் பக்கங்களை நினைவுபடுத்தும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.

தனது பதிவில், "தமிழகத் தேர்தல் முடிவுகள்... காமராஜர் தோற்றார்... மு.க.ஸ்டாலின் தோற்றுள்ளார்... சமூகம் தற்போது 'ரசிகர் மனப்பான்மை' கொண்டதாக மாறிவிட்டது; அது இன்னும் 'அரசியல் முதிர்ச்சி' பெறவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது" என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை தேர்தலில் தோல்வியடைந்ததை, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தோல்வியுடன் ஒப்பிட்டு அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எப்போதும் எதிர்க்கட்சியின் கடமை என்றும், அந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாலும், மக்கள் செல்வாக்கு என்பது வெறும் திரைப் பிம்பத்தைச் சார்ந்ததாக மாறிவருவது ஆரோக்கியமானதல்ல என்ற தொனியில் அவரது பதிவு அமைந்துள்ளது. பிரகாஷ் ராஜின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களுக்கும், பிற கட்சியினருக்கும் இடையே காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.