பீகார் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார் பிரசாந்த் கிஷோர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவின் மிக முக்கிய அரசியல் உத்திவகுப்பாளராக இருந்து, பின்னர் முழுநேர அரசியல்வாதியாக மாறிய ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தின் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதன்முறையாக நேரடியாகப் போட்டியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜன் சுராஜ் கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி இன்று பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர், தற்பொழுது முதன்முறையாகத் தன்னை ஒரு மக்கள் பிரதிநிதியாக நிலைநிறுத்திக் கொள்ள தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி, பாங்கிபூர் தொகுதிக்கு வரும் ஜூலை 30ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 3ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பாங்கிபூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருந்த பாஜகவின் நிதின் நபின், அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்குச் சென்றதால் இத்தொகுதி காலியானது. இதனால் இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் களம் காணத் தேர்ந்தெடுத்துள்ள பாங்கிபூர் தொகுதி, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா மாவட்டத்தின் எல்லைக்குள் வரும் நகர்ப்புறத் தொகுதியாகும். இது கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் பாஜகவின் மிக வலுவான பாரம்பரியக் கோட்டையாகக் கருதப்படுகிறது.
கடந்த 2025 பீகார் பொதுத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் 3.4% வாக்கு சதவீதத்தை மட்டுமே பெற்றது. அப்போது பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் வேட்பாளர் வந்தனா குமாரி 7,717 வாக்குகள் பெற்று 3-ஆவது இடத்தையே பிடித்தார். தற்போது, அதே தொகுதியில் நேரடியாகப் பிரசாந்த் கிஷோரே களம் இறங்குவது பீகார் அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமது வேட்புமனு அறிவிப்பு குறித்துப் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "பாங்கிபூர் தொகுதி மக்கள் பீகாரின் மிகவும் படித்த மற்றும் பொருளாதார ரீதியாக உயர்ந்த மக்கள் ஆவர். அவர்கள் சிறந்த வேட்பாளருக்குத் தங்களது வாக்கினை செலுத்தட்டும். என் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு வாக்களிக்கக் கோருகிறேன். என் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வாக நான் சட்டமன்றத்திற்குள் சென்றாலும், அங்குள்ள மற்ற 242 எம்.எல்.ஏ-க்களின் குரலை விட என் குரல் ஓங்கி ஒலிக்கும். மேலும், இந்த இடைத்தேர்தலானது முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான தற்போதைய இரண்டு மாத கால பாஜக - நிதிஷ்குமார் கூட்டணியின் செயல்பாட்டிற்கு மக்கள் வழங்கும் மிக முக்கியத் தீர்ப்பாக அமையும்."
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக சார்பில் நீல் ரத்தன் கோஷ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இன்னும் தங்களது வேட்பாளரை அறிவிக்காத வேளையில், பிரசாந்த் கிஷோரின் இந்த நேரடித் தேர்தல் என்ட்ரி தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
