தாமதத்தால் பள்ளியில் அனுமதி மறுப்பு... 9 வயது சிறுவன் ரயில் மோதி பலி!

 
குழந்தை

 

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், பள்ளிக்கு தாமதமாக வந்ததால் உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், 9 வயது மாணவன் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரயாக்ராஜின் இராடத்கஞ்ச் பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வென்ட் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த முகமது யஜ்தான் (9), கடந்த செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது, ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் பள்ளிக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, வீட்டுக்குத் திரும்பிய சிறுவன் பள்ளி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிறுவன் பள்ளிக்கு வரவே இல்லை என பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளி நிர்வாகம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.