பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனைக்குச் செல்லவிடாமல் தடுத்த மர வியாபாரி ... கர்ப்பிணி பெண் பலி!
காஞ்சிபுரம் அருகே பிரசவ வலி வந்த பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல், தான் கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறு தடுத்து நிறுத்திய மர வியாபாரி மீது காவல்துறையினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாததால் அப்பெண்ணும் பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு மர அறுக்கும் தொழில் நடைபெறும் இடத்தில் இருந்த மர வியாபாரி ஆறுமுகம் என்பவர், தான் கொடுத்த 20,000 ரூபாய் கடனை உடனடியாகத் திருப்பிக் கொடுத்துவிட்டுத்தான் அங்கிருந்து செல்ல வேண்டும் என்று கூறி அவர்களை வழிமறித்துத் தடுத்துள்ளார்.

பிரசவ வலியால் துடிதுடித்து மன்றாடியும் அதைப் பொருட்படுத்தாமல் வியாபாரி அனுமதிக்க மறுத்ததால், மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானது. இதனால் அந்தப் பெண் அங்கேயே குழந்தையைப் பிரசவித்த நிலையில், முறையான மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தினால் தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
