தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு!
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கண்காணிப்புப் பிரிவின் இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுவரை தாம்பரம் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது புதிய பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக இருந்த ஏ. அருண், கடந்த ஜூலை மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்தத் துறையின் இயக்குநர் பொறுப்பு முழுநேர அதிகாரி இல்லாமல் இருந்து வந்தது. இடைக்காலமாக மகேஸ்வரி ஐபிஎஸ் கூடுதல் பொறுப்பைக் கவனித்து வந்தார்.
இந்நிலையில், பிரேம் ஆனந்த் சின்ஹாவை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
