விருதாசலத்தில் கோயில் கட்டித் தருவதாக பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி!

 
பிரேமலதா பிரேமலதா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பழைய தொகுதியான விருத்தாசலத்தில் மீண்டும் களம் காண்கிறார். இன்று அவர் மேற்கொண்ட தீவிரப் பரப்புரையில் தான் வெற்றி பெற்றால் கோயில் கட்டித் தருவதாக வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம், அம்மேரி, தொப்பலிகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரேமலதா விஜயகாந்த் இன்று ‘முரசு’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். திறந்த வாகனத்தில் சென்ற அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரேமலதா விஜயகாந்த்

பரப்புரையின் போது அம்மேரி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பிரேமலதாவிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாகக் கோயில் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாகவும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மக்களின் உணர்வுகளுக்குத் தேமுதிக எப்போதும் மதிப்பளிக்கும். இந்தப் பகுதியில் நீங்கள் கோரிக்கை வைத்தபடி, நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாகக் கோயில் கட்டித் தரப்படும். கேப்டன் வழியில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே எனது முதல் பணி” என்று உறுதி அளித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்

கடந்த 2006-ம் ஆண்டு தேமுதிக முதன்முதலில் தேர்தலைச் சந்தித்தபோது, கேப்டன் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே சென்டிமென்ட் அடிப்படையில், தற்போது பிரேமலதா அதே தொகுதியில் நின்று வெற்றி பெறத் தீவிரமாகப் போராடி வருகிறார். உள்ளூர் மக்களின் அடிப்படைத் தேவைகளுடன் சேர்த்து ஆன்மீக ரீதியிலான இந்த வாக்குறுதி, அத்தொகுதி வாக்காளர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே 2-ம் தேதி தெரிந்துவிடும்.