மே 4-ல் தேமுதிக-வின் வெற்றிச் செய்தி வரும்... பிரேமலதா விஜயகாந்த் உறுதி!
உலக உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள் என்றுதான் சொல்வேன். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. மே 4-ஆம் தேதி நிச்சயம் நல்ல செய்தி வரும், எல்லோருக்கும் நல்லதே நடக்கும்" எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களது மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி அமோக வெற்றி பெறும். அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார். தேமுதிக சார்பில் போட்டியிட்டுள்ள 10 வேட்பாளர்களும் கேப்டன் விஜயகாந்தின் ஆசீர்வாதத்துடன் வெற்றி பெற்று சட்டசபைக்குச் செல்வோம்" என்றார்.

மேலும், கட்சியின் மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசிய பிரேமலதா, "எல்லோரும் வாழ்த்தினாலும் சரி, திட்டினாலும் சரி அது தேமுதிக தான். பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் மூலம் தகுந்த பதில் அளிக்கப்படும்" என அதிரடியாகத் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நெருங்கும் வேளையில் பிரேமலதாவின் இந்தப் பேச்சு தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
