ஆசிரியர் தினம்: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், சிறந்த கல்வியாளரும், தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டு அவருக்கு ஜனாதிபதி தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் தங்கள் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் மூலம் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும், குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்த அவர், மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் கடமையாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் தங்கள் அறிவைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை ஏற்று, புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும் எனவும், மாணவர்களிடையே சுயசிந்தனையையும் தேடல் மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி முர்மு, தேசத்தை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறைகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
