"புத்தரின் போதனைகள் நல்வழிக்கு வழிகாட்டும்" - ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்த பூர்ணிமா வாழ்த்து!

 
திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

பௌத்த மதத்தின் மிக முக்கியமான திருநாளான புத்த பூர்ணிமா இன்று (மே 1, 2026) நாடு முழுவதும் பக்தி சிரத்தையுடனும், அமைதியுடனும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், புத்தரின் கொள்கைகள் இன்றைய உலகிற்கு எவ்வளவு அவசியமானது என்பதை ஆழமாக வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில், “இந்த புனிதமான நாள், பகவான் புத்தர் இப்பூவுலகில் அவதரித்தது, போதி மரத்தடியில் ஞானம் பெற்றது மற்றும் அவர் மகாபரிநிர்வாணம் அடைந்தது ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முர்மு

புத்தரின் போதனைகளான கருணை, அகிம்சை, அமைதி மற்றும் ஞானம் ஆகியவை காலத்தால் அழியாதவை என்றும், அவை முழு மனித குலத்திற்கும் தொடர்ந்து நல்வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் தற்போது எண்ணற்ற சவால்களையும், போராட்டங்களையும் சந்தித்து வரும் வேளையில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நல்லிணக்கப் பாதையில் செல்வதற்குப் புத்தரின் போதனைகளே மிகச்சிறந்த தீர்வு என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி திரெளபதி

இந்த மங்களகரமான நாளில், புத்தரின் உயர்ந்த கொள்கைகளை நம் வாழ்வில் உள்வாங்கி, அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான மற்றும் அமைதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.