அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்... ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு!

 
அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி மளிகை அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி மளிகை

டீசல் விலை உயர்வு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வைச் சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் லாரி வாடகைக் கட்டணம் அதிரடியாக 25 விழுக்காடு உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. சரக்கு போக்குவரத்துச் செலவு பெருமளவு அதிகரிப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்லில் உள்ள சம்மேளனத் தலைமையகத்தில், மாநிலத் தலைவர் சி. தனராஜ் தலைமையில் அவசரச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் தனராஜ், அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் சர்வதேசப் புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உள்நாட்டில் டீசல் விலை லிட்டருக்குச் சுமார் 8 ரூபாய் வரை அதிரடியாக அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசிய பொருட்கள் விலை

ஏற்கெனவே சுங்கக் கட்டண உயர்வு, 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வு மற்றும் ஜிபிஎஸ்  கருவிகளைப் பொருத்துவதற்கான கட்டாய நடைமுறைகள் போன்றவற்றால் லாரி தொழில் நலிவடைந்து வரும் நிலையில், இந்த டீசல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என்றார். இதனால், லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க 25 விழுக்காடு வாடகை உயர்வை ஜூன் 15 முதல் அமல்படுத்துவது தவிர வேறு வழியில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 6.5 லட்சம் கனரக லாரிகளும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மினி லாரிகளும் இந்தச் சம்மேளனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால், முட்டை, கோதுமை, அரிசி போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி சிமெண்ட், கம்பி மற்றும் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களும் லாரிகள் மூலமாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

லாரி

தற்போது லாரி வாடகை கால் பங்கு (25%) உயருவதால், வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பொருட்களின் ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கும். இந்தச் செலவினங்களை வியாபாரிகள் நுகர்வோர் மீதே சுமத்துவார்கள் என்பதால், சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலை கணிசமாக உயரக் கூடும்.

ஏற்கெனவே நிலவி வரும் பொதுவான விலைவாசி உயர்வால் தவித்து வரும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டை இந்த வாடகை உயர்வு மேலும் பதம் பார்க்கப் போவதாகப் பொதுமக்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். லாரி தொழிலைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் சுமையைக் குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.