இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி... ரோம் நகரில் இந்திய கலாசார நடனங்களுடன் உற்சாக வரவேற்பு!

 
மோடி ரோம் மோடி ரோம்

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் , நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி நார்வேயில் இருந்து இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் நகருக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு அரசும், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இப்பயணத்தின் போது நெதர்லாந்துடன் முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. தொடர்ந்து சுவீடன் சென்ற பிரதமர், அந்நாட்டுப் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனை சந்தித்து வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

நார்வேயில் நடைபெற்ற 3-வது இந்தியா - நோர்டிக் உச்சி மாநாட்டில் (India-Nordic Summit) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, நார்வே நாட்டின் மிக உயரிய கவுரவமான 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வீஜியன் ஆர்டர் ஆப் மெரிட்' விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நார்வே பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இத்தாலி வந்தடைந்த பிரதமர் மோடியை, ரோம் விமான நிலையத்தில் இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான அண்டோனியோ தஜானி நேரில் சென்று வரவேற்றார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, இத்தாலியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பெருமளவில் திரண்டு வந்து பாரத மாதா கீ ஜெய் முழக்கங்களுடன் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இத்தாலிய நடனக் கலைஞர்கள் இந்திய பாரம்பரிய நடனங்களை ஆடியும், இசைக்கச்சேரி நடத்தியும் பிரதமரை வரவேற்றனர். இது குறித்த புகைப்படத்தை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "ரோம் நகருக்கு உங்களை வரவேற்கிறேன் என் நண்பரே!" என்று பதிவிட்டுள்ளார்.

இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டாரெல்லா மற்றும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியமாக இந்தியா - இத்தாலி இடையேயான வர்த்தகம் கடந்த 2025-ம் ஆண்டில் சுமார் 16.77 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்படும்.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான 'கூட்டு வியூக செயல் திட்டம் 2025-2029' இந்த சந்திப்பின் போது மறுஆய்வு செய்யப்பட உள்ளது. ரோம் நகரில் உள்ள சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமையகத்திற்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார். கடந்த 2024 ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த பிரதமர் மோடி, தற்போது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.