இன்று குமரி வருகிறார் பிரதமர் மோடி... திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ'!

 
மோடி ரோடு ஷோ மோடி ரோடு ஷோ

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பிரதமர் மோடியின் இன்றைய பயண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3மணி அளவில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து மாலை 4:00 மணி அளவில் தனது ரோடு ஷோவைத் தொடங்குகிறார்.

திருப்பரங்குன்றம் மோடி

வேப்பமூடு சந்திப்பு → மணிமேடை (Clock Tower) → ஜீவா சிலை → அண்ணா சிலை வழியாகச் சென்று வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையருகே பிரசாரம் நிறைவடைகிறது. இதற்கு முன்பு பலமுறை குமரிக்கு வந்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ள பிரதமர், முதல்முறையாக இங்குத் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தி மக்களைச் சந்திக்க உள்ளார். இந்த மெகா ரோடு ஷோவில் பிரதமருடன் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முக்கியத் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டுக் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ரோடு ஷோ நடைபெறும் பாதையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மோடி ட்ரோன்

நாகர்கோவில் மாநகரம் முழுவதும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே (ஏப்ரல் 23 வாக்குப்பதிவு) உள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை தென் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18-ஆம் தேதி கோவையிலும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.